கேத்தி - சேலாஸ் சாலையில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கேத்தி - சேலாஸ் சாலையில் காட்டேரி டேம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் துவங்கி தற்போது வரை இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக மழையின் தாக்கம் அதிகரித்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு பகுதிகளில் லேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக நேற்று காலை கேத்தி - சேலாஸ் சாலையில் காட்டேரி டேம் பகுதியில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. இதனால், இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கேத்தி, காட்டேரி டேம், கோலனிமட்டம் போன்ற பகுதிகளிலிருந்து சேலாஸ் பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மண்சரிவு காரணமாக நேற்று காலை இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பின், இந்த மண்சரிவை நெடுஞ்சாலைத்தறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிைலயில், பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

மேலும், ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மைனலை பகுதியில் 5க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதனால், இவ்வழித்தடத்திலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரங்களை ஊட்டி தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். மாவட்டத்தில் தொடர்ந்து மழை ெபய்து வருகிறது. எனினும், இதுவரை கன மழை பெய்யவில்லை.

கன மழை பெய்தால், பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. இதனால், அனைத்து துறைகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில்: ஊட்டி 5.2, குந்தா 4, பாலகொலா 14, கெத்தை 2, கிண்ணக்கொரை 2, கேத்தி 4, பர்லியார் 2.

பைகாரா அணை நிரம்பி வழிந்தது : ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பைகாரா அணை தனது முழு கொள்ளளவான 100 அடியை நேற்று மாலை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: