நீட் கவுன்சலிங் பொது பிரிவில் ஓசிஐ மாணவர்கள் பங்கேற்க அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் பொதுப் பிரிவில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்திய மாணவர்களும் (ஓசிஐ) பங்கேற்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதி நடப்பு கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களாக (என்ஆர்ஐ) கருதப்படுவார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. நீட் கவுன்சலிங் நடைபெற உள்ள நிலையில், திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையால் தங்களின் சலுகைகள் பறிபோகும் என ஓசிஐ மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங்கில் மனுதாரர்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஓசிஐ மாணவர்கள் பொதுப்பிரிவிலேயே பங்கேற்கலாம். இந்த இடைக்கால நிவாரணம் 2021-22ம் கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும். இந்த வழக்கை 2022ம் ஆண்டு ஜனவரியில் விரிவாக விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Related Stories: