தீபாவளி தொடர் விடுமுறையால் வியாபாரிகள் மகிழ்ச்சி நடைபாதை வியாபாரம் முதல் நட்சத்திர ஓட்டல் வரை களை கட்டியது-வர்க்கி, தைலம், தேயிலைத்தூள் விற்பனை அமோகம்

ஊட்டி : தீபாவளி  பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள்  குவிந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக பல மாதங்களுக்கு பின் உள்ளூர்  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான  சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில்  அதிகளவு வருவது வழக்கமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா  தலங்கள் மூடல், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை, கட்டுபாடுகளுடன் அனுமதி என  போன்ற காரணங்களால் சுற்றுலா தொழில் நிலையின்றி இருந்தது. இதனால்  நீலகிரியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர்  பாதிக்கப்பட்டிருந்தனர்.

 இந்த சூழலில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை  காரணமாக நீலகிரியில் ஏப்தல் மாதம் முதல் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள்  ஆகஸ்ட் மாதம் முதல் திறக்கப்பட்டன. நீலகிரியை பொருத்த வரை கேரளா, கர்நாடகா  மாநில சுற்றுலா பயணிகள் வருகையை நம்பியே உள்ள நிலையில், அந்த சமயத்தில்  கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் கேரளாவில் இருந்து  நீலகிரிக்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள்  கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதன் காரணமாக உள்ளூர் வியாபாரிகளுக்கு  பெரிய அளவில் வருவாய் கிடைக்கவில்லை. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள்  தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தளர்வுகள் தளர்த்தப்பட்டு இரு தவணை தடுப்பூசி  செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் வரலாம் என தெரிவிக்கப்பட்டதால்  தற்போது ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக  அதிகரித்துள்ளது.

இதனால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா  பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது. இதனிடையே தீபாவளி பண்டிகை விடுமுறை  காரணமாக ஊட்டியில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு  வந்தவர்கள் ஊட்டியில் இருந்து வர்க்கி, நீலகிரி தைலம், ஹொம்மேட் சாக்லேட்,  வெம்மை ஆடைகள், தேயிலைத்தூள், அலங்கார செடிகள், காய்கறிகள் போன்றவற்றை  வாங்கி செல்கின்றனர்.

இதன் காரணமாக உள்ளூர் வியாபாரிகளுக்கு தற்போது  வருவாய் கிடைத்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு நல்ல வியாபாரம் நடைபெற்று  வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்கள் முதல் நடைபாதை  வியாபாரிகள் வரை சுற்றுலா பயணிகள் வருகையால் மீண்டும் பழைய நிலைக்கு  திரும்பியுள்ளனர். இந்த சூழல் நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின்  விருப்பமாகவும் உள்ளது.

Related Stories: