அபுதாபியில் இருந்து கடத்தி வந்த ரூ.90.17 லட்சம் தங்கம் பறிமுதல்: தஞ்சாவூர் பயணி கைது

மீனம்பாக்கம்: அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சூட்கேஸ் பீடிங்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.90.17 லட்சம் மதிப்புடைய 2.06 கிலோ தங்க கம்பிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தஞ்சாவூர் பயணியை கைது செய்தனர். அபுதாபியில் இருந்து எத்தியாடு ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த 32 வயது ஆண் பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார்.

அவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வெளியே சென்ற அவரை மீண்டும் விமான நிலையத்திற்குள் அழைத்து வந்து சோதனையிட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த 2 பெரிய சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது, பீடிங்கிற்குள் தங்கத்தினால் ஆன தங்க கம்பிகளை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 2.06 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.90.17 லட்சம். இதையடுத்து, சுங்கத்துறையினர் அந்த பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: