சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, நாளை விடுமுறை: மக்கள் சென்னை வருவதை தள்ளி வைக்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் பயணத்தை தள்ளிவைக்கவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுபாடு விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் இன்று (7ம் தேதி) காலை முதல் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம் பகுதிகளில் நிவாரண பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளேன். மக்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் மீட்பு பணியில் ஈடுபட தேசிய படையை சேர்ந்த வீரர்களும், காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் அனைத்து அலுவலர்களும் இரவு, பகல் பாராது பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கனமழையை தொடர்ந்து மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 4 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் மேல் மழை பெய்துள்ளது. இது அதி கனமழை ஆகும். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ராட்சத பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. சுமார் 500 இடங்களில் இந்த பம்புகள் பொருத்தப்பட்டு வெள்ளநீர் அகற்றப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி செய்து தரப்படுகிறது. சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை 44 மையங்கள் துவக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிதொடர்ந்து நடைபெறும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரிகள் மட்டுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளேன். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு 8.11.2021 மற்றும் 9.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறவர்கள் தங்கள் பயணத்தை இன்னும் 2/3 நாட்கள் தள்ளிவைத்து பயணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதாவது கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் ஈரோடு 24 மணி நேரத்தில் 20 மி.மீக்கு மேல் மழை பெய்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இதுவரை அதிகமழை பொழிவு இல்லை. இருந்தாலும் அரசு அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளார்கள். பொதுமக்களுக்கு அரசின் உதவி தேவைப்படும் நேரங்களில் மாநில கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதனை 1070 என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள், குழிகள் போன்றவற்றை மிகவிரைவாக சரிசெய்ய துறைகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். எனவே, பொதுமக்கள் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மழை வருவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால்களை சுத்தப்படுத்தி இருக்கிறோம். எதுஎப்படி இருந்தாலும் இந்த ஆட்சியில் அனைவரையும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியில் 24 மணி நேரமும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் செய்திகளை எங்களிடம் தெரிவித்து வருகிறார்கள். தேவைப்படும் நேரங்களில் தண்ணீரை திறந்துவருகிறார்கள். குறுகிய காலத்தில் பெருமழை பெய்ததால் தான் இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த கால ஆட்சியில் எதையுமே செய்யவில்லை. எனவே, செய்யாத பணிகளை செய்து வருகிறோம். தற்போது 50 சதவீத பணிகளை செய்துள்ளோம். மீதம் உள்ள பணிகளை மழை காலம் முடிந்த உடன் செய்வோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: