தென்னிந்திய கோல்ப் போட்டி: சோழவந்தான் மாணவி பதக்கம் வென்று சாதனை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி தென் இந்திய அளவில் நடந்த கோல்ப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்தார். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்த கேசவன்-உமாராணி தம்பதியரின் மகள் அனு கேசவன்(9). இவர் பெங்களூரில் நடந்த தென் இந்திய அளவிலான கோல்ப்(குழிப்பந்தாட்டம்) விளையாட்டில், பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான “இ” பிரிவு போட்டியில், இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 45 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவியான அனு கேசவன் பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார். கருப்பட்டி கிராமத்திற்கு வந்த இவரை, கிராம மக்கள் அனைவரும் வரவேற்று வாழ்த்தினர். சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் இவர், பல பரிசுகளை வென்றுள்ளார். இதனால் இவரது பெற்றோரும் இவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

தற்போது மாணவியின் தாய் உமாராணி கோவையில், மாவட்ட நீதிபதியாக பணிபுரிவதால், அங்குள்ள கடற்படை இராணுவப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வெற்றி பெற்ற அவருக்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: