காரியாபட்டி அருகே வெள்ளத்தால் பாதித்த நரிக்குறவர் காலனி அடிப்படை வசதிக்கு ரூ.46.49 லட்சம் ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்

காரியாபட்டி : காரியாபட்டி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.46.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.காரியாபட்டி அருகே கம்பிக்குடி ஊராட்சி அரியநேந்தல் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் காலனியில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை கலெக்டர் மேகநாதரெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரியநேந்தல் நரிக்குறவர் காலனியில் 52 குடும்பங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2016 முதல் கட்டுக்குத்தகை கரிசல்குளம் கண்மாயில் குடியிருந்து வந்தனர். பின்னர், தகுதியான நிலத்தில் பட்டா வழங்க கேட்டுக்கொண்டதன் பேரில் கம்பிக்குடி ஊராட்சியில் அரியநேந்தல் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கில் பட்டா வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்க பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கேட்டு கொண்டதன் பேரில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள ஓடையில் தரைப்பாலம், சாலை வசதி, மின்சார வசதி, வீடு கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை சத்திரபுளியங்குளம் வரத்து கால்வாய் ஓடையில் சிறு பாலம், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம், ரூ.1.90 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள், ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி என மொத்தம் ரூ.46.49 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் துவங்குகின்றன. இப்பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைக்க உள்ளார்.முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மின்கம்பங்கள் நடப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி மூலம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Related Stories: