திருத்தணி முருகன் கோயிலில் சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் 5ம் படை வீடு திருத்தணி முருகன் கோயில்.  இங்கு சித்திரை மாத பிரமோற்சவம், ஆடி திருவிழா, கார்த்திகை தீபம், படித்திருவிழா, கந்தசஷ்டி மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு என விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க கோயில் மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்சவர் ஆறுமுகசாமி, காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடத்தப்பட்டது. அதேபோன்று மூலவர் முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். லட்சார்ச்சனை, அபிஷேகத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமியை தரிசித்தனர்.

இந்த விழா முடியும்வரை இரவு 8 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை வேளையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 9ம் தேதி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 10ம் தேதி திருக்கல்யாணம் நடக்க உள்ளது.  சஷ்டி விழா அன்றுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: