ஆம்பூர் அருகே கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் அம்மை நோய்: பொதுமக்களே வைத்தியம் பார்க்கும் அவலம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் அம்மை நோய்களுக்கு பொதுமக்களே வைத்தியம் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரபள்ளி, மேல்மிட்டாளம், கீழ்மிட்டாளம்,  சின்னவரிகம், ரகுநாதபுரம், மேகனாம்பள்ளி, பெரியவரிகம், கூர்மாபாளையம், அத்திமாகுலப்பள்ளி, கதவாளம், அபிகிரிப்பட்டரை போன்ற பகுதிகளில் கால்நடைகளான பசு மாடுகள் மற்றும் காளைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.கடந்த சில மாதங்களாக பெய்து வரும் பருவ மழையால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஈரமான பகுதிகளில் நடமாடி வருகிறது. மேலும், ஈரமான பகுதிகளில் கால்நடைகள் நடப்பதால், கால்நடைகளின் கால்களில் புண்கள் ஏற்படுகிறது. இந்த புண்கள் வெடித்து சீழாக வடிகிறது. தொடர்ந்து கால்நடைகளின் கால்களில் சீழ் வடிவதால், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் கால்நடைகள் வழியால் துடிக்கின்றன.

இதையடுத்து உடனடியாக தடுப்பு ஊசிகளும், மருந்துகளும் கொடுக்காத கால்நடைகள், உயிர் இழந்து வருகின்றன. மேலும், வேகமாக பரவி வரும் இந்த அம்மை நோயை கட்டுப்படுத்த கால்நடை துறையினர் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கால்நடைகளுக்கு அம்மை நோய் வருவது இப்போது வேகமாக பரவி வருகிறது.மேலும், கால்நடை துறையினர் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததே வேகமாக பரவி வரும் இந்த அம்மை நோய்க்கு காரணம் என கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் இப்போது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் கால்களை கட்டி படுக்க வைக்கின்றனர். பின்னர் தூய்மையான தண்ணீர் கொண்டு நான்கு கால்களையும் நன்கு கழுவி விடுகின்றனர். பின்னர் மஞ்சள் தூள், ரசகற்பூரம் கலந்த கலவையை புண்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மெதுவாக தடவி வருகின்றனர். இதுபோன்ற வைத்தியம் சில கால்நடைகளுக்கு கை கொடுப்பதால், எல்லோரும் இப்போது அவரவர் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Related Stories: