வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் 1 லட்சம் தன்னார்வலர்கள் தயார்: வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் பேரிடர்துறை, காவல்துறை, தீயணப்பு துறை மற்றும் அனைத்து துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் 261.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 190.9 மி.மீ (37சதவீதம்) கூடுதல் ஆகும்.

கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை இருக்கும். இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பெய்துள்ள மழை காரணமாக 50 முதல் 90 சதவீதம் வரை நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.மாநில பேரிடர் மீட்பு படையினர் 1000 பேர் தயார் நிலையில் உள்ளனர். அதேபோன்று அனைத்து கிராமங்களிலும் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை, வெள்ளம் காரணமாக ஏரி, கண்மாய் உடைப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் வருவதற்கு முன்பே மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை சரி செய்து விடுவார்கள். மேலும் 121 பாதுகாப்பு மையங்கள், 5,106 நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் 350 பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளது.

மழையால் மின்சாரம் பாதிக்கப்பட்டால் வேகமாக மின்இணைப்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மழையால் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு முன், மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்கப்படும்.

நேற்றுமுன்தினம்கூட தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழந்தார், இதையடுத்து அனைத்து சாலைகளிலும் ஆபத்தான நிலையில் உள்ள மர கிளைகளை மட்டும் வெட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மரத்தை மனசாட்சிப்படி வெட்ட முடியாது. அதேநேரம், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வானிலை அதிகாரிகள் கொடுக்கும் தகவல்கள் உடனடியாக மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: