பணி தொடர்பான விவரங்களை கேட்ட நீர்வளத்துறை 40 உதவி பொறியாளர்கள் மீது குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளதா? அறிக்கை அனுப்ப முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு

சென்னை: நீர்வளத்துறையில் 40 உதவி பொறியாளர்களின் பணி தொடர்பான விவரங்களை அறிக்கையாக அனுப்ப முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழக பொதுப்பணி, நீர்வளத்துறையில் உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், தலைமை பொறியாளர்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு ,பதவி உயர்வு  வழங்கும் போது, பொறியாளர்களின் பணி தொடர்பாக கமுக்க அறிக்கை கேட்கப்படுவது வழக்கம். குறிப்பாக, உதவி பொறியாளர் நிலையில் உள்ளவர்கள் கோட்ட அலுவலகத்தில் பணியாற்றினால் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வட்ட அலுவலகத்தில் பணியாற்றினால் கண்காணிப்பு பொறியாளரும் கமுக்க அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெற வேண்டும். அந்த அறிக்கையின் பேரில் தான் பொறியாளர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. மேலும், அந்த அறிக்கையில் அவர் மீது உள்ள புகார்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அந்த விவரங்களையும் அறிக்கையில் இடம் பெறுகிறது. அந்த அறிக்கையை வைத்து தான் பதவி உயர்வு பட்டியலில் அவர்களது பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக முடிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது 409 உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதில், 102 இளநிலை பொறியாளர்களும் அடக்கம். இந்த பொறியாளர்களில் செயல்பாடுகள் குறித்து  அறிக்கை பெறப்பட்டு வருகிறது.

இதில், 40 பேருக்கு மட்டுமே கடந்த காலங்களில் கமுக்க அறிக்கைகள் இல்லை என்கிற தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் ஒன்றை  எழுதி அனுப்பியுள்ளார். அதில் தங்களது மண்டல கட்டுபாட்டின் கீழ் உள்ள கோட்டங்களில் பணிபுரிந்து வரும் 40 உதவி பொறியாளர்களுக்கு விடுபட்ட காலத்திற்கான  கமுக்க அறிக்கை பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: