தனியார் பேருந்துகளில் விழாக்கால கட்டணம் என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!!

சென்னை:  தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்த மக்கள் வெளியேறி வருகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், சானடோரியம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு செல்ல மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டனர். கூட்டம் அலைமோதிய போதும், போதிய எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் நெரிசலின்றி பயணம் மேற்கொண்டனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு கவுண்டர்கள் முறையாக செயல்படுகிறதா, ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறதா, நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, என அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் விழாக்கால கட்டணம் என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், போக்குவரத்து கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 371 பேருந்துகளில்  விபத்து மற்றும் பழுது காரணமாக 37 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து நேற்று இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 785 பேருந்துகளில் இதுவரை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 107 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 51 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்,என்றார்.

Related Stories: