தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க விதித்த தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் பட்டாசு வெடிக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.நாடு முழுவதும் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு, வரும் தீபாவளி, காளி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளில் பட்டாசுகளை வெடிக்கவும், அவற்றை விற்கவும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘எந்தவிதமான அடிப்படை விஷயங்களையும் அலசி ஆராயாமல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதித்துள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவானது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும். அதிலிருந்து மேற்கு வங்கம் மட்டும் விலக்கு பெற முடியாது. அதே சமயம், தடை விதிக்கப்பட்ட பட்டாசுகள் விற்கப்படுவதையும் வெடிப்பதையும் மாநில அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

Related Stories: