ஐகோர்ட் கிளையில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு: நவ.1ம் தேதி தீர்ப்பு

மதுரை: வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களின் மீது ஐகோர்ட் கிளையில் வரும் நவ.1ம் தேதி  தீர்ப்பளிக்கப்படவுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து 30க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கண்ணம்மாள் அமர்வு விசாரித்தது. இந்நிலையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம்.துரைச்சுவாமி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி எம்.துரைச்சுவாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்வாக நீதிபதியாக வழக்குகளை விசாரித்து வருவதால் இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எம்.துரைச்சுவாமி, கே.முரளி சங்கர் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.

இதையடுத்து கடந்த செப்.15 முதல் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களின் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் தனியாக பட்டியலிட்டு நீதிபதிகள் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அனைத்து தரப்பு வாதங்களுக்கும் நேரம் ஒதுக்கீடு ெசய்து நீதிபதிகள் விசாரித்தனர். தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 22ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் இந்த மனுக்களின் மீது வரும் நவ.1ம் தேதி (நாளை மறுநாள்) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளனர்.

Related Stories: