வெடிகுண்டுக்கு பயந்தவன் நான் அல்ல... சந்திரபாபு ஆவேசம்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு பேசியதாவது: விசாகப்பட்டினம் மலைப்பகுதியில் 25,000 ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து ₹8 ஆயிரம் கோடி மதிப்பிலான கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. நடவடிக்கை எடுக்கக்கோரினால் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேலும், பொய் வழக்குகள் பதிவு செய்கின்றனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் மாநில நிலவரம் குறித்து நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளேன். மாநிலத்தில் அராஜக ஆட்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகம் அருகே உள்ள கட்சி அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. என் மீது வெடிகுண்டு வீசுவேன் என்கிறார்கள். வெடிகுண்டுகளுக்கு பயப்படுபவன் நான் இல்லை. சொந்த சித்தப்பாவை கொலை செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். நாம் எதற்கு பயப்பட வேண்டும்? மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வரும்.

ஆட்சிக்கு வந்தவுடன் ஆளும் கட்சியினர் செய்த அராஜக செயல்கள் மீது கமிஷன் அமைத்து விசாரிக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை விட மாட்டேன். நீதிக்கு தலை வணங்குகிறோம். மத உணர்வுகளை தூண்டுபவர்களை அடக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: