சாலை தடுப்பு அகற்றிய விவகாரம்; மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங். மூத்த தலைவர் காட்டம்

புதுடெல்லி: டெல்லி எல்லைகளை மூடியதற்காக பிரதமர் மோடி உச்ச நீதிமன்றம் மற்றும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கோரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த  ஓராண்டாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ெபாதுமக்களுக்கு  இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை விவசாய அமைப்பினர் நேற்று அகற்றினர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘டெல்லி எல்லைகளை தடுத்தது விவசாயிகள் அல்ல; காவல்துறை தான் என்பது தெளிவாகி உள்ளது. கடந்த 11 மாதங்களாக டெல்லியின் எல்லைகள் உங்கள் போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளன என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டை தவறாக வழிநடத்தியதற்காகவும், விவசாயிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதற்காகவும் உச்ச நீதிமன்றம் மற்றும் மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களது தோல்விகளை மறைப்பதற்காக விவசாயிகளை அவதூறாக பேசுகின்றீர்’ என்றார்.

Related Stories: