இலங்கை தமிழர்களின் நலன்காக்க 20 பேர் கொண்ட ஆலோசனை குழு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: சட்டமன்றப் பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடரின் போது, சட்டமன்றப்பேரவை விதி எண் 110ன் கீழ் 27.8.2021 அன்று முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் சில நீடித்த  பிரச்னைக்கு தீர்வினை கண்டறிய ஒரு ஆலோசனைக் குழு அமைப்பது தொடர்பாக அறிவித்துள்ளார்.

எனவே, இலங்கை தமிழர்களின் நலன் குறித்து ஆலோசனை குழு அமைப்பது தொடர்பான விரிவான செயற்குறிப்பு ஒன்றை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குனர் அனுப்பியுள்ளார். அதன்படி, முகாம்களிலும், வெளிப்பதிவிலும் உள்ள இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதும், தமிழ்நாடு அரசு முடிவுகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள்/நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்துவதற்கு குறித்த காலத்திற்குள் உரிய பின்னூட்டுகளுக்கு வகை செய்வதும் இந்த ஆலோசனைக் குழுவின் முதன்மைப் பணியாகும்.

முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குறிப்பாக காப்பிடம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், இலங்கை தமிழர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி, சமூகப் பாதுகாப்பு பயன்கள், குறை களைதல், திறன் வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட வேலைவாய்ப்பு குறித்த தனிநபர் உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை மற்றும் இலங்கைக்கு தாமாக விரும்பி செல்லுதல் போன்ற நீடித்த தீர்வுகள் தொடர்பான சட்டப்பூர்வ அம்சங்கள் ஆகிய மூன்றும் இந்த குழுவின் ஒட்டுமொத்த நோக்கம் ஆகும்.

இந்த குழுவின் தலைவராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், துணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் இருப்பர். முதன்மை குழுவில் 5 பேரும், அலுவலக உறுப்பினர்கள் 8 பேரும், ஆலோசனை உறுப்பினர்களாக 5 பேரும், அலுவல் சார்பற்ற உறுப்பினர்களாக இரண்டு பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆலோசனைக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மற்றும் அல்லது சூழ்நிலை, தேவையைப் பொறுத்து பொருத்தமான நேரத்தில் கூட்டப்படலாம். ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்ட நிரலின்படி அழைக்கப்பட்ட உறுப்பினர்களில் குறைந்த அளவாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பங்குபெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: