மெரினா கடற்கரையில் பரபரப்பு; முகத்தில் காயங்களுடன் இளம்பெண் சடலம் மீட்பு: கொலையா போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள மெரினா கடற்கரையில் நேற்று மதியம் பொதுமக்கள் சிலர் அமர்ந்து இருந்தனர். அப்போது கடல் அலையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் முகத்தில் ரத்த காயங்களுடன் கரை ஒதுங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் கரை ஒதுங்கிய இளம்பெண் உடலை கடற்கரை மீட்பு குழுவினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் வெள்ளை மற்றும் கருப்பு நிற சுடிதார் அணிந்து இருந்தார். மாநிறமான அவர், திருமணம் ஆனவர். முகத்தில் பலமாக தாக்கப்பட்டது போல் ரத்த காயங்கள் இருந்தது. இதனால் குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து உடலை கடலில் வீசி சென்றனரா என்பது குறித்து போலீசார் மெரினா கடற்கரையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இறந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை வைத்து காணாமல் போனவர்கள் பட்டியலின்படி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: