வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.  இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகரும் என்பதால் இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.  நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசி வருகிறது. இன்று முதல் 31ம் தேதி வரையில் குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 60 கிமீ வேகம் வரையும் காற்று வீசும். அதனால் மீனவர்கள் அப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: