பட்டாசு விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தி, இத்தகைய விபத்துகள் நடப்பதை அரசு தடுக்க வேண்டும். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): சங்கராபுரம் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 7 பேர் உயிரிழந்து,  மேலும் பலர் படுகாயமுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

பட்டாசு கடை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ50 ஆயிரமும் வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். பட்டாசு வெடிவிபத்தில் பலியான 7 பேர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):  பட்டாசுக் கடைகளை உடனடியாக ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு பட்டாசுக் கடைக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்குகிறதோ அது கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தொடர் கண்காணிப்பில் உறுதி செய்துகொள்ள வேண்டும். சங்கராபுரம் பகுதி பட்டாசுக் கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): பட்டாசுக் கடை விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி உதவ வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி மேலும் நிகழாமல் இருக்க தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாகவும், அரசு காட்டிய நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதனை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடையின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: