தமிழ்நாடு நம்பர் 1 என்ற நிலைக்கு வரவேண்டும், அதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

சென்னை: “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இல்லம் தேடிக் கல்வி என்ற சிறப்பான திட்டத்தை உருவாக்கி, இன்றைய நாள் செயல்படுத்தத் தொடங்கி இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் - கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுதலை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இல்லம் தேடிக் கல்வி என்பது சாதாரணத் திட்டமல்ல! எல்லாத் திட்டங்களையும் போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லிவிட முடியாது. இந்தத் திட்டம்தான் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியருடைய வாழ்விலே ஒளியேற்றப் போகிறது .அதன் மூலமாக, நூற்றாண்டு காலத்திற்கு அறிவினுடைய வெளிச்சம் பரவ இருக்கிறது. மிகப்பெரிய  கல்விப் புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய விஷயங்கள் எல்லாம் இப்படி சிறுசிறு அளவில்தான் தொடங்கப்பட்டது. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாகக் கொண்டு சேர்த்தது ஆரம்பகால திராவிட இயக்கம். திராவிடம் என்றால் என்ன என்று, சில கோமாளிகளும், அதைப்பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக்கூடாது.  

நீதிக்கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராசர் அவர்கள் - மறைந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் - நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுச் செழுமைப்படுத்தப்பட்டது.

இதுபோன்ற சிறப்பு பெறப்போகக்கூடிய திட்டம்தான்  இந்த ‘இல்லம் தேடிக் கல்வி’என்கிற திட்டமாகும். கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று சொன்னாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டது யார் என்று கேட்டால் நம்முடைய மாணவர்கள்தான். பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த அவர்களை வீட்டுக்குள் முடக்கி விட்டது கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம். பள்ளிக்கூடம் என்ற பரந்த வெளியைப் பயன்படுத்த முடியாமல் வீட்டுக்குள் இருந்ததே குழந்தைகளின் மனதைப் பாதித்துவிட்டது. அது அவர்களது படிப்பை - படிக்கும் முறையை - படிப்பில் இருக்கக்கூடிய ஆர்வத்தைக் குறைத்துவிட்டது

இந்தப் பாதிப்பை எப்படி சரிசெய்வது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிந்தித்தார்கள். பள்ளிக்கு வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மேலும் கூடுதல் நேரத்தை பள்ளி நேரம் போலவே படிப்பில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இல்லம் தேடிக் கல்வி!

ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொடையாக வழங்க விரும்பினால் அவர்களை இந்த அரசு வரவேற்கத் கடமைப்பட்டிருக்கிறது.  தன்னார்வலர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். படித்த இளைஞர்கள் தங்களது ஓய்வு நேரத்தை இதில் பங்கெடுப்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றலாம்.

ஆட்சியியலின் இலக்கணம் என்று கம்பீரமாக சொல்லக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சமத்துவம் ஆகிய தத்துவங்களை அரசியலில் மட்டுமல்ல, ஆட்சியியலில் முன்னெடுக்க நிலைக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி. அந்த நெறிமுறைகளை வென்றெடுக்க எந்நாளும் உழைக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. இந்த நெறிமுறைகள் சமூக, பொருளாதார கல்வித் திட்டங்களிலும் மின்ன வேண்டுமென்று நினைக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி.  அந்த அடித்தளத்தில்தான், இதுபோன்ற திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

இன்றைக்கு அனைத்துச் சமுதாய மக்களும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி அதிகாரம் செலுத்தும் இடத்துக்கு வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு அடிப்படை, திராவிட இயக்கத்தை வலுவுடன் வழிநடத்தி; இந்த இனத்தின் அறிவையும் மானத்தையும் தட்டியெழுப்பிய தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களும் போட்ட விதைதான்.  

எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கி இந்த நாட்டை வளர்க்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஏழை - எளிய, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகவும், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய  மேன்மைக்காகவும் எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

உயர்கல்வித் துறையாக இருந்தாலும் - பள்ளிக்கல்வித் துறையாக இருந்தாலும், அனைவருக்கும் கல்வியை - உன்னதமான கல்வியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பார்போற்றும் பள்ளிக்கல்வித் துறையின் இந்தத் திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடாக’விரைவில் மாற்ற முடியும். பள்ளிக்கும் இல்லத்துக்குமான இடைவெளி குறையும். இல்லங்களும் பள்ளிகள் ஆகும்! பள்ளிகளையும் இல்லங்களாக நினைத்து மாணவச் செல்வங்களே நீங்கள் பயனுற வேண்டும்!

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

மறந்து விடவில்லை, இன்றைக்கு நாம் மனதில் பதிய வைத்திருக்கின்றோம். நான் பலநிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்து எத்தனையோ நிறுவனங்கள், எத்தனையோ பத்திரிகைகள் ஒரு மதிப்பெண் போட்டது. அந்த மதிப்பெண் போடுகிறபோது முதலமைச்சர் நம்பர் 1 மு.க.ஸ்டாலின் என்று போடுகிறார்கள், அதற்குப் பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று வரிசைப்படுத்தி போடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதைவிட தமிழ்நாடு நம்பர் 1 என்ற நிலைக்கு வரவேண்டும், அதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று அன்போடு கேட்டு விடைபெறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>