‘வீக் எண்ட் டே’ முதல் `ரேவ் பார்ட்டி’ கொண்டாட்டம் வரை போதை பொருளால் வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள்: பாலிவுட் பிரபலங்களின் கைதை பார்த்து பாடம் கற்பார்களா?

மும்பை: ‘வீக் எண்ட் டே’ முதல் `ரேவ் பார்ட்டி’ போன்றவற்றில் பங்கேற்கும் இளம்பருவத்தினர், போதை பொருளை பயன்படுத்தி வாழ்க்கையை தொலைப்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் போதை பொருள் பயன்படுத்தி சிக்கிய பாலிவுட் பிரபலங்களின் கைதுகளை பார்த்து பாடம் கற்பார்களா? எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போதை பொருள் கட்டுப்பாட்டு மையத்தின் மும்பை பிரிவின் பிடியில் பாலிவுட் பிரபலங்கள் அடுக்கடுக்காக சிக்கி வருகின்றனர். கடந்த 1990களின் பாலிவுட் கதாநாயகிகள் ஜூஹி சாவ்லா, ரவீனா டாண்டன், குல்கர்னி தொடங்கி, சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் போதை பொருள் வழக்கில் கைதாகினர். இப்போது மெகா ஸ்டார் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் போதை பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். தனது தந்தையின் வழியில் சினிமா தொழிலில் கால்பதிக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இப்போது தனது இளம் வயதில் சிறையில் உள்ளார். இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக போதை பொருள் (மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, இன்ஹேலர், உயிருக்கு ஆபத்தான கோகேயின் ECSTASY, X, XTC போன்றவை) பயன்படுத்துதல் மாறிவிட்டது. உலகளாவிய ஃபேஷன், கல்வி, வாழ்க்கையை முறையை நவீன இந்திய இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர். அதனால், அவர்கள் அந்த வாழ்க்கை முறையை வாழ விரும்புகின்றனர். மகாத்மா காந்தி பிறந்த நாளன்று நண்பர்களுடன் கப்பலில் புறப்பட்ட ஆர்யன் கான், அடுத்த சில மணி நேரங்களில் போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் குற்றச்சாட்டின் கீழ் போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை நீதிமன்ற விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.

ஆனால், பிரபலங்களும், அவர்களின் வாரிசுகள் கைது செய்யப்படுவதும், அவர்களின் வீடுகளில் ெரய்டு நடத்ததையும் பார்க்கும் போது, இளைஞர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவதை காட்டுகிறது. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட அறியப்பட்ட அல்லது அறியப்படாத நடிகர், நடிகைகளை கடந்த சில மாதங்களில் போதை ெபாருள் கட்டுப்பாட்டு பிரிவு விசாரித்துள்ளது. கிட்டத்தட்ட விசாரணை அல்லது கைது செய்யப்பட்ட அனைவரும் 40 வயதிற்கு உட்பட்டவர்கள். மேலும், அவர்களில் சிலர் பெரிய வணிகர்களாகவும், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்களாகவும் உள்ளனர். மும்பை போதை ெபாருள் கட்டுப்பாட்டு அலுவலகம் இன்றைய நிலையில் பரபரப்பு செய்திகளை சேகரிக்கும் மையமாக மாறிவிட்டது. அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின்படி, மூன்று கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதாக தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். விசாரணை முகமைகளில் பெறப்பட்ட தகவல்களின்படி, மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட ‘ரேவ்’ பார்ட்டிகள் உள்ளன. அதாவது, அதிர வைக்கும் இசை, லேசாக மிளிரும் லேசர் விளக்கு, உயர்தர மது மற் றும் சட்ட விரோத போதைப் பொருட்களுடன் ஆரவார காட்சிகள் அரங்கேறும் கச்சேரிதான் `ரேவ் பார்ட்டி’.

`ரிசார்ட்’டில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்களும், இளம் பெண்களுமாக கூடி விடுகிறார்கள். அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். அதிரும் இசை ஆடத் தெரியாதவர்களையும் துள்ள வைக்கும். அருகில் நிற்பவர்களோ, `கமான்… கேரி ஆன் … டோன்ட் ெவாரி’ என்று ஊக்கப்படுத்தி ஆட வைக்கிறார்கள். அரை குறை வெளிச்சம் வெட்கத்தை விட்டு ஆடுகின்றனர். நண்பர்களும் உடன் இருப்பதால் ஆடிப் பழகாதவர்களாக இருந்தாலும் தானாகவே ஆட்டம் வந்துவிடுகிறது. ஆண்களும், பெண்களும் பேதமில்லாமல் இப்படி ஆடிப்பாடி கும்மாளமடிப்பது வாலிப பருவதிற்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் ரேவ் பார்ட்டியில் மயங்கிக் கிடக்கும் இளம் பெண்களின் நிலைமை என்னாகும் என்பது விடிந்தால் தெரியும்.  அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கிறார்கள். சிந்திக்கும் ஆற்றல் செயல் திறன் குறைந்து ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பார்ட்டிகளுக்கு அடிமையாகிவிடவும் செய்கிறார்கள். மேலும் இதுபோன்ற பார்ட்டிகளில் லட்சக்கணக்கான பணம் புழங்குகிறது. காரணம், அங்கு பயன்படுத்தும் பொருட்கள்தான். கடந்த பத்தாண்டுகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் அளவை காட்டிலும் தற்போது, 500 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில், 15 சதவீதத்திற்கும் குறைவான அளவை மற்றுமே போதை பொருள் கட்டுப்பாட்டு ஏஜென்சிகளின் கைகளில் கிடைத்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில் போதைப் ெபாருட்களின் நுகரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது உறுதியாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆப்கானிஸ்தான் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்தவை. இவை இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டவை. போதை பொருள் சப்ளையர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் இளைஞர்களை குறிவைத்து சப்ளை செய்து வருகின்றனர். அதிகப்படியான பணம் கையில் புழங்குதல், தங்களது விருப்பத்தை தேர்வு செய்யும் சுதந்திரம் ஆகியவற்றால், இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதை பொருளுக்கு அடிமையான பலர், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 10 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள், போதை பொருட்களை தங்களது இளம் பருவத்தில் இருந்தே பயன்படுத்தி வரத் தொடங்கி உள்ளனர்.

நகர்புறங்களில் இந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பஞ்சாபில் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குழந்தையும் போதை பொருளை ருசித்து விடுகின்றன என்று ஆதாரங்கள் கூறுகின்றன. உள்ளூர் காவல் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறைக்கும், போதைப்பொருள் மாஃபியாக்களுக்கும் இடையே உள்ள ெநருக்கம், இளைஞர்களை பாழ்படுத்தி வருகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை இல்லாததும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பழக்க வழக்கங்களை ெபற்றோர் கண்காணிக்கும் முறையும் குறைந்துவிட்டதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகர்ப்புற குடும்பங்களில் தந்தை, தாய் இருவரும் வேலை சென்றுவிடுவதால், அவர்களின் குழந்தைகளுடன் மிகக் குறைந்த நேரம் மட்டுமே செலவிடுகின்றனர்.  பெற்றோரின் வாழ்க்கை முறைகள் குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலான நடுத்தர வர்க்க மற்றும் பணக்கார ஜோடிகள் தங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, `ரேவ் பார்ட்டி’ போன்ற ெசாகுசு வாழ்க்கையை தேடி செல்கின்றனர். சில நேரங்களில் அவர்களின் குழந்தைகளையும் அழைத்து செல்கின்றனர். அவர்களும், அந்த பார்ட்டியில் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். இவ்வாறு போதை ெபாருள் பயன்படுத்தி காவல் துறையிடம் சிக்கும் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் குழந்தைகளை சட்டத்திலிருந்து மீட்டு வந்துவிடுகின்றனர்.

பெரிய நகரங்களில் உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு இளம் பருவத்தினர் வாரத்திற்கு ஒரு முறையாவது போதையில் இருப்பதாக மதிப்பீடுகள் உள்ளன. இவ்வாறு போதை பழக்கத்திற்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் செல்போன்கள், அவர்களின் கம்ப்யூட்டர், அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் போன்றவற்றை பெற்றோர் கண்காணிப்பது இல்லை. அதனால், அவர்கள் எளிதாக தவறான பாதைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால், தங்களது குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையிலான உடல் மற்றும் உணர்வு ரீதியான நெருக்கம் குறைந்துவிடுகிறது. ‘வீக் எண்ட் டே’ கொண்டாட்டம் முதல் `ரேவ் பார்ட்டி’ வரை போதை கொண்டாட்டங்களில் ஈடுபடும் இன்றைய இளைஞர்கள், பாலிவுட் பிரபலங்களின் கைதை பார்த்து திருந்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சமீர் வான்கடேவும், பாலிவுட் பிரபலங்களும்...

ஷாருக் கான்

கடந்த 2011ம் ஆண்டு ஜூலையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியாக இருந்த இன்றைய போதை பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான குழுவால் லண்டன் சென்றிருந்த  பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மும்பை விமான நிலையத்தில் தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். இவர் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் சென்றதற்காக அவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மினிஷா லம்பா

கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் நடிகை மினிஷா கேன்ஸில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது தடுத்து வைக்கப்பட்டார். அப்போதைய உதவி ஆணையர் (சுங்கம்) சமீர் வான்கடேவின் குழு அவளைத் தடுத்து நிறுத்தியது. ரூ.50 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற ஆபரங்களை வைத்திருந்தார். 16 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அனுஷ்கா ஷர்மா

கடந்த 2011ம் ஆண்டு ஜூனில் உதவி ஆணையர் (சுங்கம்) சமீர் வான்கடே தலைமையிலான குழுவினர், மும்பை விமான நிலையத்தில் நடிகையும், கிரிக்கெட் வீரர் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவை மடக்கி விசாரித்தது. அவரிடம் ஒரு வைர வளையல், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள இரண்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

கத்ரீனா கைஃப்

கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பரில் நடிகை கத்ரீனா கைஃப், கேத்தே பசுபிக் விமானத்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். இவர் கொண்டு வந்த பொருகளை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டார். அவரது இரண்டு உதவியாளர்களான பி.சத்தா மற்றும் அருண் ஷர்மா ஆகியோர் விட்டுச் சென்ற பொருட்களை வாங்க விமான நிலையம் வந்தனர். ஆனால், அவர்கள் சமீர் வான்கடேவின் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர்,  கத்ரீனா கைஃப்பின் உடைமைகளில் ஒரு ஆப்பிள் ஐபேட், ரூ.30,000 ரொக்கம், இரண்டு விஸ்கி பாட்டில்கள் இருந்தன. பின்னர் இருவரையும் சமீர் வான்கடே விசாரித்துவிட்டு, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரூ.12,000 அபராதம் விதித்து அனுப்பினார்.

ரன்பீர் கபூர்

கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ரன்பீர் கபூர், விதிமுறை மீறி மாற்றுப்பாதையில் சென்றதால் தடுத்து வைக்கப்பட்டார். அவருக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது. ரன்பீர் கபூரின் பொருட்களை சமீர் வான்கடே குழுவினர் சோதனை செய்தபோது, ​​அதில் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் மற்றும் காலணிகளை கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ரன்பீர் கபூர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

மிகா சிங்

கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரியில் பாடகர் மிகா சிங், பாங்காக்கில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவர், ரூ. 9 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை கொண்டு சென்ற போது சமீர் வான்கடே தலைமையிலான சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரது பையில் இரண்டு மதுபாட்டில்கள், கருப்பு கண்ணாடிகள் மற்றும் வாசனை திரவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிபாஷா பாசு

கடந்த 2011ம் ஆண்டில் நடிகை பிபாஷா பாசு லண்டனில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, சமீர் வான்கடே குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இருந்தன. அதனால், அவருக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அனுராக் காஷ்யப்

கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வருமான வரித்துறை துணை ஆணையராக சமீர் வான்கடே பணிபுரிந்தபோது, ​​சேவை வரி ஏய்ப்புக்காக நடிகர் அனுராக் காஷ்யப்பிற்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்தார். துறை சார்ந்த சம்மனுக்கு பதிலளிக்காததால், அனுராக் காஷ்யப்பின் கணக்குகள் முடக்கப்பட்டன.

விவேக் ஓபராய்

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் நடிகர் விவேக் ஓபராய், தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலித்த ரூ.40 லட்சத்தை சேவை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அப்போதைய துணை ஆணையர் சமீர் வான்கடே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்.

ரியா சக்ரபோர்த்தி

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சுஷாந்தின் காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தியை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் என்ற என்ற அடிப்படையில் சமீர் வான்கடே கைது செய்தார்.

தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான்

போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி கைதான விவகாரம் தொடர்பாக, தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் போதை பொருள் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி சமீர் வான்கடே முன்பு விளக்கம் அளித்தனர்.

அர்மான் கோஹ்லி

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நடிகர் அர்மான் கோஹ்லி கடந்தாண்டு ஆகஸ்ட்டில் சமீர் வான்கடே தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

ஆர்யன் கான்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2ம் தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், சமீர் வான்கடே தலைமையிலான குழுவினாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவையும் சமீர் வான்கடே குழு விசாரித்து வருகிறது.

Related Stories: