கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த பாலம்-சீரமைக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்னாம்பட்டு கிராமத்திலிருந்து சந்தபடுகை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே பிரதான தெற்குராஜன் பாசன வாய்க்கால் செல்வதால், இந்த வாய்க்கால் குறுக்கே 5 வருடங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு அந்தப் பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கம்பிகள் வலிமை குன்றி காணப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் முறிந்து உடைந்து கீழே விழுந்து விட்டது. இதனால் அப்பகுதிக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் பைக் ஆகிய இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சென்று திரும்பும் போது தடுமாறி வாய்க்காலில் விழும் நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் சைக்கிளில் வரும்போது இந்த வாய்க்காலுக்குள் விழுந்து விடும் அபாய நிலை உள்ளது. இரவு நேரங்களில் கால்நடையாக வருபவர்கள் கூட இந்த வாய்க்காலில் விழும் அபாய நிலை உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இந்த வழியே சென்ற 15 பேர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தடுமாறி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சென்று குணமாகி வீடு திரும்பி இருப்பதாகக்கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதியினல் உள்ள கிராம மக்களின் நலன் கருதி இந்த பாலத்தின் இரு புறங்களிலும் அமைந்துள்ள தரமற்ற பாதுகாப்பு கம்பிகளை அகற்றி விட்டு தரமான பாதுகாப்பு கம்பிகளை பொருத்த வேண்டும். அல்லது பாதுகாப்பு கம்பிகளுக்கு பதிலாக பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: