வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் இன்று உருவாகும்.! தமிழகத்தில் கனமழை பெய்யும்

சென்னை: வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த பகுதி  உருவாகும் என்றும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இது தவிர தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், மிதமான மழை பெய்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தப் பகுதி  உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  இன்று பெய்யும்.

வரும் 29ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதைஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும், மிக கனமழையும் பெய்யும். பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.  சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 50 கிமீ வேகத்தில் வீசும். 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும்.

Related Stories: