கோவா பாஜக அரசின் ஊழலை கூறியதால் வெளியேற்றப்பட்டேன்: மேகாலயா ஆளுநரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

பனாஜி: கோவா பாஜக அரசின் ஊழலை கூறியதால் வெளியேற்றப்பட்டேன் என்று மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா ஆளுநராக பணியாற்றும் சத்ய பால் மாலிக், ஏற்கனவே கோவா ஆளுநராக பணியாற்றினார். இவர், அவ்வப்போது வெளிப்படையாக கருத்துகளை பேசி வருபவர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். இந்நிலையில் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘கோவா பாஜக அரசில் நடந்த ஊழலை சுட்டிக் காட்டியதால், அம்மாநில ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

ஊழலில் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள், தாங்கள் நேர்மையாக பணியாற்றுவதாக பிரதமரிடம் கூறினர்’ என்று கூறியிருந்தார். கோவாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான அரசு மீதான ஊழல் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்  டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘கோவா பாஜக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

அடுத்த 72 மணி நேரத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒவ்வொரு  துறையிலும் ஊழல் புரையோடியுள்ளது. ஆளும் பாஜகவால்  நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரே, கோவா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் இதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும்’ என்றார். கோவா முன்னாள் முதல்வரும், திரிணாமுல் தேசிய துணைத் தலைவருமான லூயிசின்ஹோ  ஃபலீரோ கூறுகையில், ‘கோவா அரசுக்கு எதிரான மக்கள் குற்றப்பத்திரிகையை வெளியிட்டோம்.

நாங்கள் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநர் சத்யபால் மாலிக்  உறுதிப்படுத்தியுள்ளார்’ என்றார். மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோவா பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தானாவதே, ‘அவர் (சத்ய பால் மாலிக்) சொன்ன தகவல் பொய்யானது. இதுகுறித்து ஒன்றிய அரசுடன் பேசுவோம்’ என்றார்.

Related Stories:

More
>