அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கம்

தாம்பரம்: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல்லாவரம் தொகுதியில் பல்வேறு வழித்தடங்களில் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த மாநகர பேருந்து சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சட்டமன்றத் தேர்தலின்போது, இத்தொகுதியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் மாநகர பேருந்து சேவை கொண்டு வருவேன் என திமுக வேட்பாளர் இ.கருணாநிதி உறுதியளித்தார். பின்னர் வெற்றி பெற்றதும், பல்லாவரம் தொகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், புதிய வழித்தடங்களிலும் மீண்டும் மாநகர பேருந்து சேவை துவக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மனு வழங்கி வலியுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் மீண்டும் மாநகர பேருந்து சேவை துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் செல்லும் 17 மாநகர பேருந்து சேவைகளைத் துவக்கி வைத்தார்.

இதன்மூலம் குரோம்பேட்டை, பல்லாவரத்தில் இருந்து பூந்தமல்லி, பொழிச்சலூர், கோயம்பேடு, திருவான்மியூர், முகலிவாக்கம், திருப்போரூர், குன்றத்தூர், மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் மாநகர பேருந்து சேவைகள் துவங்கின. இதில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன், பம்மல் நகர செயலாளர் வே.கருணாநிதி, புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் வனஜா தயாளன், மாரிமுத்து, நரேஷ் கண்ணா, இ.ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், மு.ரஞ்சன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>