வேலூர் சத்துவாச்சாரியில் 20 அடி கழிவுநீர் கால்வாய் 5 அடியாக சுருக்கி கட்டும் அவலம்-முழு இடத்தையும் அளவிட்டு கால்வாய் அமைக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரியில் 20 அடி கழிவுநீர் கால்வாயை 5 அடியாக சுருக்கி கட்டுவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே முழு இடத்தையும் அளவீட்டு கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சத்துவாச்சாரி வள்ளலார் அரசு நிதியுதவி பள்ளி அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்து வந்தது. இதனால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் அடைப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால்வாய் தூர்வாரப்பட்டு இருபுறமும் கான்கிரீட் தளம்  அமைக்கும் பணி நடந்து வருகிறது. 20 அடிக்கு மேல் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கான முழு இடத்திலும் கான்கிரீட் சுவர் அமைக்காமல், 5 அடி அளவில் கால்வாய் சுருக்கி கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் இருபுறங்களிலும் தனியார் கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிவிட்டு, கால்வாய்க்கான இடம் முழுவதிலும் கால்வாய்க்கான கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும்.

அப்படி அமைக்காவிட்டால் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டால் கூட ஜேசிபி இயந்திரத்தை உள்ளே இறக்கி அகற்ற முடியாத நிலை ஏற்படும். இதனால் மழைநீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக களஆய்வு செய்து கால்வாய் இருபுறமும் விரிவாக்கம் செய்து கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது தான் இருப்புறமும் தடுப்பு சுவருடன் கீழ்பகுதியிலும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை எல்லாம் அளவீடு செய்து பணிகள் தொடங்க வேண்டும். தற்போது 5 அடியில் கால்வாய் கட்டி வருகின்றனர். கால்வாய் இடத்தையும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்க்கான இடம் முழுவதிலும் கான்கிரீட் சுவர் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: