சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி!!

சென்னை : அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவரே ஓபிஎஸ் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

மதுரையில் ஓ பன்னீர் செல்வம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘‘அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்’’ என்றார்.

 இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில், ‘சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு உண்மையாகவே அதிமுக மீது பற்று இருந்தால், அவர் ஜெயலலிதாவிடம் மீண்டும் இணைந்த போது, நானோ எங்கள் குடும்பத்தினரோ அரசியலுக்கு வர மாட்டோம் என கடிதம் கொடுத்தபடி நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Stories:

More
>