பாரதி அரசு மகளிர் கல்லூரியில் கல்வியுடன், தொழில்துறை பயிற்சி: உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

தண்டையார்பேட்டை: பாரதி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வியுடன் தொழில்துறை சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும், என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  மண்ணடி பிரகாசம் சாலையில் உள்ள பாரதி அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கல்லூரியின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்துள்ளதால் அதனை உயர் கல்வித்துறை சார்பில் சீரமைக்க வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கல்லூரி முதல்வர் ஆகியோர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த கல்லூரியில்  4,500 மாணவிகள் படிக்கின்றனர். இதில்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இந்த கல்லூரியில் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி மாணவிகளுக்கு கல்வியுடன், தொழில்துறை பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து  இடங்களிலும் மாணவர்களுக்கு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: