வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து சேர்த்த விவகாரம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 8 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை: சோதனையில் சிக்கிய சொத்து ஆவணங்கள் குறித்து வாக்குமூலம் பதிவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 55 % சொத்து சேர்த்த விவகாரத்தில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜரானார். அவரிடம், சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார்.

அவரது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் சென்றது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர், சென்னை உட்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் இருந்து கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவன முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது, அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 55%க்கும் மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது தெரியவந்தது. அதைதொடர்ந்து சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் ஆஜராகவில்லை.

அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் வரும் 25ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி கடந்த 19ம் தேதி சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து முன்னாள் போக்குவர்த்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை 10.50 மணிக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜரானார். அவரிடம் சோதனையின் போது கைப்பற்றபட்ட சொத்துக்கள் குறித்தும், அமைச்சராக பதவிக்கு வந்த பிறகு எந்த வருமானத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த போது இருந்த சொத்து மதிப்பு மற்றும் தற்போது உள்ள சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவித்துள்ள சொத்து பட்டியல்கள் குறித்தும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த பணத்திற்கான வரவு எங்கிருந்து வந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்னாள் அமைச்சரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதேபோல் தனது பதவி காலத்தில் போக்குவரத்து துறையில் ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை விசாரணை அதிகாரி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அதாவது 8 மணி நேரம் வரை நீடித்தது. மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகரையும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: