காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி: அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். கொரோனா தொற்றால் காஞ்சிபுரம் பெரியார் நகரை சேர்ந்த கைவினை கலைஞர் சுந்தர்ராஜன் என்பவர் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி, 2 வாய் பேச இயலா மாற்றுத் திறனாளி மகள்கள், 2 மகன்களுடன் தவித்து வந்தார். கைவினைக் கலைஞரான சுந்தர்ராஜன், தொழில் மேம்பாட்டுக்காக 2 லட்சம் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரமாட்டார்.

எனவே, அரசின் உதவித்தொகை உள்பட நிவாரணங்கள் கிடைக்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுந்தர்ராஜனின் குடும்ப நிலை, குடும்ப தலைவரை இழந்து மாற்றுத் திறனாளி மகளின் நிலை குறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஜூன் 29ம் தேதி வெளியானது. மேலும், தினகரன் சார்பில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையரிடம், குடும்ப தலைவரை  இழந்து தவிக்கும் பெண்ணின் நிலைமையை எடுத்துக் கூறப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு 1.86 கோடி நிதிக்கான காசோலைகள், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 7 பழங்குடியின மக்களுக்கு 1.75 லட்சத்தில் மீன்பிடி வலைகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 15 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, மின்சாரத்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு 15.22 லட்சத்தில் இலவச மின் இணைப்புக்கான அட்டைகள் என மொத்தம் 2.02 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது.  கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெற்றோர்களில் ஒருவரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் வீதம் 86 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் முகாம்களை நாள்தோறும் நடத்தி வருகிறது. எனவே, உடனடியாக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.  இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலசரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: