சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு!: கொரோனா பரவலை தடுக்க டோக்கனுக்கு பதில் இனிமேல் டிக்கெட்..!!

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதில் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி மெட்ரோ ரயில் சேவையை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்த மெட்ரோ சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 லட்சம் வரையில் காணப்படும். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் டோக்கன் நடைமுறையை மாற்றி கியூ ஆர் கோட் பொறிக்கப்பட்ட காகித டிக்கெட் நடைமுறையை கொண்டுவர மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நிலையத்தில் இருந்து வெளியேறவும், உள் நுழையவும் இந்த டிக்கெட் பயன்படும். இதனால் ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டை வேறு ஒருவர் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். பயணிகள் கவுன்டரிலும், இயந்திரங்கள் வாயிலாகவும் இந்த பயணசீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். முதற்கட்டமாக 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் இதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவப்படும் பணி விரைவில் தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: