சென்னையில் நடந்த சோதனையில் இளங்கோவன் பெயரில் ரூ.70 கோடி மதிப்பில் பங்கு முதலீடு கண்டுபிடிப்பு: வாழப்பாடியில் மேலும் 20 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளியும் சிக்கியது

சேலம்: எடப்பாடியின் நண்பர் இளங்கோவன் பெயரில், உள்நாடு, வெளிநாடுகளில் ₹70 கோடி மதிப்பிலான பங்கு முதலீடுகள் இருப்பது சென்னையில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நடந்த ஊழல்களில் தொடர்புடைய மாஜி அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவரும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், ஜெயலலிதா பேரவையின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன் வீடுகளில் நேற்றுமுன்தினம் போலீசார் ரெய்டு நடத்தினர். தமிழகம் முழுவதும் 38 இடங்களில் நேற்று முன்தினம் துவங்கிய சோதனை பல இடங்களில் நேற்று அதிகாலை வரை நீடித்தது.

சேலம், சென்னை, நாமக்கல், கோவை, திருச்சி உள்ளிட்ட 36  இடங்களில் நடந்த சோதனையில், ₹29.77 லட்சம் ரொக்கப்பணம், 21.2 கிலோ (2650  பவுன்) தங்க நகைகள், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பஸ்கள், 282 கிலோ வெள்ளி  பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி வைப்பு தொகை ₹68 லட்சம்,  கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக நேற்றுமுன்தினம் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து சோதனை முடிந்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ₹5.5 லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவணி, ₹25 கோடி மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள் மற்றும் ₹45 கோடி மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் ஆகியவை கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், வாழப்பாடியில் உள்ள நகைக்கடையில் நடந்த சோதனையில், சுமார் 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள் இருப்பைவிட கூடுதலாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு, லாக்கரை முடக்க முடிவு

இளங்கோவனுடன் தொடர்புடைய மேலும் பலரின்  வீட்டில் சோதனை நடத்த லஞ்சஒழிப்பு  போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. அத்துடன், இளங்கோவன்,  அவரது மகன் பிரவீன்குமார் மற்றும்  அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின்  வீடுகள், நகைக்கடைகளில் கைப்பற்றப்பட்ட  ஆவணங்களை வைத்து விசாரிக்கப்பட்டு  வருகிறது. இளங்கோவன், அவரது மகன்  பிரவீன்குமார் மற்றும்  சோதனை  செய்யப்பட்ட உறவினர்கள்,  ஆதரவாளர்களின்  வங்கி கணக்கையும், வங்கி  லாக்கரையும் முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: