தமிழகத்தில் 1.4 கோடி முதியவர்கள் இருக்கும் நிலையில் முதல் தவணை போட்டவர்கள் 47 லட்சம் பேர்

சென்னை: தமிழகம்  முழுவதும் நேற்று 6வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு   மேற்கொண்டார். நிகழ்ச்சியில் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவனை டீன் ெஜயந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம்  முழுவதும் 1.4 கோடி முதியவர்கள் இருக்கும் நிலையில் அதில் 47 லட்சம்  பேர் தான் முதல் தவணை தடுப்பூசியும், 21 விழுக்காடு தான் இரண்டாம் தவணை  தடுப்பூசி போட்டுள்ளனர். முதியவர்கள் தடுப்பூசிக்கு  முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மொத்தமாக 3.98 கோடி பேர் 68 விழுக்காடு பேர் முதல்  தவணை தடுப்பூசியும், 1.5  கோடி 26 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை  தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

100 கோடி தடுப்பூசி  செலுத்திய பிறகும் வதந்தியை பரப்புவது வருத்தமளிக்கிறது. நாமக்கல்  மாவட்டத்தில் சற்று தொற்று அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த மாவட்ட  ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற  நாடுகளில் தொற்று அதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பண்டிகை  காலத்திற்கு பிறகு தொற்று அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு  நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தும்  பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்டு  வருகிறது. அனைத்து நோய்களை கட்டுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  டெங்குவை கட்டுப்படுத்த 21,930 பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், புதிதாக தொடங்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு மையத்தின் தற்போது  வரையிலும் 543 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் 43 டெல்டா வகை  கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மீதம் உள்ள 500 பரிசோதனை முடிவுகள்  ஆய்வில் உள்ளது. டெல்டா வகை தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொரோனாவால்  உயிரிழந்தவர்களில் 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி  செலுத்தாதவர்கள். 9% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள். 4 சதவீதம்  பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* கொரோனாவால் உயிரிழந்த 87% பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள்

* மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் தகவல்

Related Stories: