குறைந்த விலை, நிறைந்த தரத்தில் தமிழகத்தில் ஓரிரு வாரங்களில் வலிமை சிமெண்ட் அறிமுகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: குறைந்த விலை, நிறைந்த தரத்தில் ஓரிரு வாரத்தில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெ.டன்  டான்செம்  சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் இது மார்ச் 2021  முதல் செப்படம்பர் 2021  வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.   

தற்போது,  டான்செம்  சிமெண்ட் 350 ரூபாய்  முதல் 360  ரூபாய்  வரை விற்கப்பட்டு வருகிறது. தனியார் சிமெண்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய்  குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும், ஓரிரு வாரங்களில்,  தமிழக அரசின் டான்செம் நிறுவனம் ‘வலிமை’ என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது.  இந்நிறுவனம்  மூலம், மாதம் ஒன்றுக்கு  சுமார் 90,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் ‘அரசு’ சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதனுடன், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் ‘வலிமை’ சிமெண்ட்  முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.  இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: