மழை நீடிப்பால் டெங்கு பரவும் அபாயம்; குமரியில் பள்ளிகள், கல்லூரிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில்: குமரியில் மழை நீடிப்பால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாள் தோறும் சளி பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 12 லட்சத்து 25 ஆயிரத்து 841   நபர்களுக்கு  கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 50 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 19 பேரும், கோவிட் கவனிப்பு மையங்களில், தனியார் மருத்துவமனைகளில்  31  பேரும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 57,593 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் முககவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக நேற்று மட்டும் 89 நபர்களுக்கு அபராதமாக ரூபாய் 17,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 34 நபர்களுக்கு அபராதமாக ரூ. 2 கோடியே 75 லட்சத்து 23 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாவட்டத்தில் மழை நீடிப்பதால் டெங்கு பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே டெங்கு  காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தீவிரமாக களமிறங்கி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுப்பு செய்து, அவர்கள் வசிப்பிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 9, 10, 11, 12ம் வகுப்புகள் இயங்குகின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் யாராவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்படி, மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் விஜய் சந்திரன் மேற்பார்வையில் பள்ளிகளில் தூய்ைம பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பள்ளிகள் நடந்து வருவதால், மாணவ, மாணவிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்க கூடாது என்ற வகையில் பள்ளிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். நேற்று மாலை நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அண்ணாபஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் கான்வெண்ட் பள்ளிகளில் கொசு ஒழிப்பு புகை அடிக்கப்பட்டது.

மேலும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ளுபடி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதுபோல் மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடக்கின்றன. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருபவர்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களின் முகவரிகள், செல்போன்கள் வாங்கப்பட்டு அவர்களின் உடல் நலம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை வருபவர்களின் விபரங்களை, குறிப்பாக குழந்தைகள் தொடர்பான விபரங்களை தனி பதிவேட்டில் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் எண்ணிக்கை பூஜ்யம்: கொரோனா பாதிப்பு இல்லாத நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் நேற்று 3,516 பேருக்கு சளி பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மீதி 20 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் ஆண்கள் 10 பேர், பெண்கள் 10 பேர் ஆவர்.  அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 4 பேர், கிள்ளியூர் ஒன்றியத்தில் 3 பேர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 2 பேர், முஞ்சிறை ஒன்றியத்தில் 7 பேர், ராஜாக்கமங்கலம், திருவட்டார் ஒன்றியங்களில் தலா ஒருவர், தக்கலை ஒன்றியத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியில் 600 பேருக்கு நடந்த சளி பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: