சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம்: உறுப்பினர்களையும் நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை : சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 23) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும், சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை அமைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் - தலைவர்

2. முனைவர் கே. தனவேல், ஐஏஎஸ் (ஓய்வு) - உறுப்பினர்

3. பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் - உறுப்பினர்

4. கவிஞர் மனுஷ்யபுத்திரன் - உறுப்பினர்

5. ஏ.ஜெய்சன் - உறுப்பினர்

6. பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் - உறுப்பினர்

7. கோ. கருணாநிதி - உறுப்பினர்

சமூகநீதி கண்காணிப்புக் குழுவானது, சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் உறுப்பினர்-செயலாளராக அங்கம் வகிப்பார்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் பற்றிய விவரங்கள்

* சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சிறுவயது தொடங்கி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகம் முழுவதும் பரப்பி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநலன் குறித்து, பேசியும் எழுதியும் வருபவர்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரையில்

* முனைவர் கே.தனவேல் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். மத்திய அரசிலும், மாநில அரசிலும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

* பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த நீண்ட அனுபவம் பெற்றவர்; மேலும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைத் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர்.

* கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரலாறு மற்றும் ஊடகத்துறையில் இரண்டு முதுகலை பட்டங்கள் பெற்றவர். இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான சன்ஸ்கிருதி சம்மான் விருதினைப் பெற்றவர். இந்தியா டுடே இவரை தமிழகத்தின் செல்வாக்குமிக்க 10 மனிதர்களில் ஒருவராக இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்ததும், ஆனந்தவிகடன் தமிழகத்தின் டாப் 10 மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

* ஜெய்சன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் நீண்ட அனுபவம் கொண்டவர்.

* பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் கடந்த 36 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றியவர். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

* திரு. கோ. கருணாநிதி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகநீதியை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அறிமுகம் செய்தவர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: