2.72 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு அதிகரிப்பு தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உரங்கள் வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், த நிலங்களின் பரப்பு 55.5 லட்சம் ஏக்கரை தாண்டியுள்ளது. எனவே அனைத்து உரங்களுக்கும், குறிப்பாக யூரியா உரத்துக்கான தேவை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஒன்றிய அரசு 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 4.911 லட்சம் மெட்ரிக் டன் யூரியா வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், உர நிறுவனங்கள் இதுநாள்வரை 3.852 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை மட்டுமே வழங்கியுள்ளதால், 1.059 லட்சம் மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கண்ட காலக் கட்டத்தில் வழங்க வேண்டிய 1.47 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரங்களில் 1.15 லட்சம் மெட்ரிக் டன் உரங்களையே உர நிறுவனங்கள் வழங்கியுள்ளதால், அதிலும் 32,000 மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு சம்பா சாகுபடி காலம் மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு மாநில அரசு 125 லட்சம் மெட்ரிக் டன் அரிசி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவு தானியங்களை விளைவிக்கவும், சாகுபடி நிலங்களின் அளவை அதிகரிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களின் வழங்கலில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை தானிய விளைச்சலைக் கடுமையாகப் பாதிப்பதோடு, விவசாயிகளின் வருவாயையும் பாதிக்கும். எனவே, உரிய அலுவலர்களுக்கு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பித்து திட்டப்படி ஒட்டுமொத்த அளவிலான யூரியாவையும், கூடுதலாக 25,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரங்களையும், 10,000 மெட்ரிக் டன் எம்.ஓ.பி. உரங்களையும். உருவாகியுள்ள அதிகரித்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வழங்கிட வேண்டும்.இவ்வாறு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, ஒன்றிய ராசயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சரிடம் நேரில் வழங்கினார்.

Related Stories: