தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: குமரிக் கடல் பகுதியை ஒட்டி 1.5 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தென் மேற்கு பருவமழைக் காலமும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் நேற்று 12 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. இதுதவிர மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் அதை ஒட்டிய வட உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், குமரிக் கடல் பகுதியை ஒட்டி 1.5 கிமீ உயரம் வரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும்.

இந்த நிலை 25ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.

Related Stories: