பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது எப்படி?: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், அவர்களுக்கான வருமான உச்சவரம்பு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி எழுப்பியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீத இடங்களை வழங்கும்படி தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பு (ரூ.8 லட்சம்) எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்பது பற்றிய விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் நட்ராஜ், ‘‘இந்த இடஒதுக்கீட்டுக்கு பொதுவாக ரூ.8 லட்சம் என வருமான உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது அரசின் கொள்கை சார்ந்த ஒன்று.  அதனால், அதில் செனோ ஆணையம் போன்ற எதையும் அமைத்து ஆய்வு செய்ய முடியாது. இருப்பினும், இதில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,’’ என்றார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட்,  ‘‘ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு, எந்த அளவுகோல் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது? இதை அமல்படுத்தும் முன்பாக எடுக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? அதற்கான புள்ளி விவரங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது? ஓபிசி பிரிவிலும் ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தில் உள்ளவர்களும் இருக்கின்றனர். அவர்களும் இதனால் பாதிக்கின்றனர். இதை அரசு கருத்தில் கொள்ளவில்லையா? பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு என்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. எதன் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்பது  தெரிந்தாக வேண்டும். இடஒதுக்கீடுகளை செயல்படுத்தும்போது, மக்கள் தொகை, சமூகவியல் மற்றும் பொருளாதார உட்பட அனைத்து புள்ளி விவரங்களும் சரியான முறையில் இருக்க வேண்டாமா? முக்கியமாக, எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி ஆகியவற்றை இணைத்து மொத்தமாக 49 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், 103வது சட்டத் திருத்தம் அடிப்படையில் 50 சதவீத இடஒதுகீட்டை இந்த 10 சதவீதம் மீறும் விதமாக உள்ளது. அதனை அரசு ஏன் கருத்தில் கொள்ளவில்லை?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அப்போது, குறுக்கிட்ட ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர், ‘இந்த வழக்கில் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை இரண்டொரு நாளில் தாக்கல் செய்கிறோம்,’ என தெரிவித்தார். இதில், ‘27 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு பட்டியலிடப்படாமல் இருக்கிறது. அது குறித்த எழுத்துப்பூர்வ அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’ என திமுக தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். நீதிபதிகள், அது தொடர்பான வழக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தனர்.பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஒன்றிய அரசுக்கு 2 வாரம் அவகாசம் தருகிறோம். இந்த இடைப்பட்ட காலத்துக்குள் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எப்படி, எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது. முந்தைய இடஒதுக்கீட்டில் இது அதிகமாக உள்ளதா? இதன் வருமான உச்சவரம்பு கிராமபுறம் மற்றும் நகர்புற மக்களின் வாங்கும் திறன், பொருளாதார நிலைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டதா? இதில், வருமான வரி செலுத்தும் வரம்பு கணக்கிடப்பட்டதா? என்பது தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதேப்போல், இந்த வழக்கில் சமூக நீதி அமைச்சகத்தையும் எதிர் மனுதாரராக நீதிமன்றம் இணைக்கிறது,’ என கூறி, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

More
>