அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் தென் மாவட்டங்களில் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா

சென்னை: அடுத்த வாரம் முதல் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆடியோ அரசியல் செய்து வந்தார். சசிகலாவின் இந்த திடீர் நடவடிக்கைகள் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், சசிகலாவிற்கு எதிராக மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தநிலையில், கடந்த 16ம் தேதி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவு இடத்தில் சசிகலா திடீரென மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அதிமுக கொடியை ஏந்தி வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து, அடுத்த நாளே (17ம் தேதி) அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அங்கு ‘அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார்.  

சசிகலாவின் இந்த தொடர் நடவடிக்கைகள் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது குறித்து அதிமுக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலா கட்சியில் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். ஆனால், சசிகலாவோ ஒற்றுமையுடன் இருப்போம், மறப்போம் மன்னிப்போம் எனக்கூறி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுத்தும் வருகிறார்.

அடுத்ததாக, சசிகலா அடுத்த வாரம் முதல் தென் மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக அதிருப்தி நிர்வாகிகளை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, 28ம் தேதி நெல்லை, 29ம் தேதி ராமநாதபுரம், 30ம் தேதி மதுரை, நவம்பர் 1ம் தேதி தஞ்சாவூர் சென்று அங்கு ஆதரவாளர்களை சந்திப்பார் என அமமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.சசிகலாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தென்மாவட்டங்களில் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக அதிருப்தி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனராம். தென் மாவட்டத்தைத் தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சசிகலா சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் அதிமுகவிற்கு மீண்டும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Related Stories:

More
>