சென்னையில் பருவமழை இடர்பாடுகளை போக்க பொறியாளர்கள் மேற்பார்வையில் வார்டு வாரியாக குழுக்கள் அமைப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான  சாலை- எம்ஜிஆர் நகர் மார்க்கெட் சந்திப்பு,  அழகர்சாமி சாலை சந்திப்பு,   நெசப்பாக்கம் கழிவுநீரகற்று வாரிய நிலைய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  புதிய கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 10 எம்எல்டி திறன் கொண்ட  மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளையும், அண்ணா பிரதான சாலை-எம்ஜிஆர் நகர் மார்க்கெட்  சந்திப்பு பகுதியில் ₹2.20 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த கழிவுநீர்  குழாய்களை மாற்றி புதிய கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணிகளையும், அண்ணா பிரதான சாலை அழகர்சாமி சாலை  சந்திப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணி மற்றும் கழிவுநீர்  குழாய் சீரமைக்கும் பணிகளையும், நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையம்  அருகில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணியையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.

நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ் குமார், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் பிரசாத் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.  பின்னர்  அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது: நெசப்பாக்கம் போரூரில் நிலைத்த  நீராதாரம் உருவாக்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் ₹47.24 கோடியில் 10  எம்.எல்.டி. திறன் கொண்ட 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் 3ம் நிலை  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் எடுத்துச்செல்ல 12  கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள்  அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் போரூர் ஏரியில் நிரப்பப்படும்.  இத்திட்டத்தின் சோதனை ஓட்டத்துக்கு பிறகு மாநகரின்  பல்வேறு நீர்நிலைகளில் இதுபோன்ற சுத்திகரிப்பு நீரினை நிரப்பும் பணியினை  மேற்கொள்ள திட்டம் வகுக்கப்படும். பருவநிலை இடர்பாடுகளை போக்க பொறியாளர்கள் மேற்பார்வையில் வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: