தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

சென்னை: தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கிராமப்புறங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்திட பாரத் நெட் திட்டத்தின் 2ம் கட்ட பணிக்காக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பாரத் நெட் திட்டத்திற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி மற்றும் பெசில் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரூ.1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்ட ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.

2ம் கட்டத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 6,427 கிராம பஞ்சாயத்துக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. 6,427 கிராமங்களும் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் 1 ஜி.பி.பி.எஸ். அளவிலான அலைக்கற்றை சேவையாகும். இத்திட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அதிவேக இணைய வசதியை பெற முடியும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இந்த இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் கரூர், கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்ட கிராமங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு அனைத்து 12,525 கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி ஒன்றிய அரசு டெண்டரை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: