22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!: நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், புழல் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக பெய்யும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புழல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாத வகையில் ஏரியை முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். ஏரியின் கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அதன் இயக்கம் சரியாக உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு நடத்துகிறார். ஏரியின் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து முதல்வர் கேட்டறிந்தார். நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆகாய தாமரை அகற்றவும், கரையை பலப்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3.30 டி.எம்.சி.யில் தற்போது 2.77 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. 1999ல் முதலமைச்சாராக இருந்த கலைஞர், புழல் ஏரியை ஆய்வு செய்தார். தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>