டிஜிபி அலுவலகம் எதிரே பரபரப்பு கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

சென்னை:  விழுப்புரம் மாவட்டம் கோளியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகன் பிரசன்னா(26). திருமணம் ஆகாத இவர், கடந்த 2019ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் தொழில்நுட்பு பிரிவில் தற்போது பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு, பிரசன்னா டிஜிபி அலுவலகத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்க முயன்றார். அப்போது காமராஜர் சாலை வழியாக அடையார் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, உதவி ஆய்வாளர் பிரசன்னா மீது மோதியது. இதில் சினிமா காட்சியை போல் தூக்கி வீசப்பட்ட அவர், எதிர் திசையில் வந்த டாடா வேனின் பின் சக்கரத்தில் சிக்கி நீண்ட தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.

இதில், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் சுயநினைவு இழந்தார்.

இதை பார்த்த டிஜிபி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், படுகாயமடைந்த உதவி ஆய்வாளரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் டாக்டர்கள் பிரசன்னாவை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைதொடர்ந்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வடபழனி கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(41) மற்றும் வியாசர்பாடி பிபி காலனி 5வது ெதருவை சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திக்(41) ஆகியோரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இளம் உதவி ஆய்வாளர் ஒருவர் டிஜிபி அலுவலகம் முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: வண்டலூர் வயர்லஸ் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜி.பிரசன்னா (26)  நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும் பிரசன்னா உடல் வைக்கப்பட்டிருந்த ராயப்பேட்டை மருத்துவமனைக்கு டிஜிபி சைலோந்திரபாபு நேரில் சென்று, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories: