கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களின் வாடகைதாரர்கள் நவ.1 முதல் ஆன்லைன் மூலம் வாடகை செலுத்தும் வசதி: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களின் வாடகைதாரர்கள் ஆன்லைன் மூலம் வாடகை செலுத்தும் வசதி நவ.1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.

தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கணினி வழியில் வாடகை செலுத்தும் திட்டத்தை கடந்த 8ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டம் வருகிற 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. கோயில்களுக்கு வாடகை செலுத்துபவர்கள் மாதத்தின் முதல் தேதி முதல் 10ம் தேதி வரை வாடகை தொகையினை இணையவழியாகவோ அல்லது கோயிலுக்கு நேரில் சென்று கணினி வழியாகவோ செலுத்தி அதற்காக ரசீதினை பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தை செம்மையான முறையில் செயல்படுத்த கணினி, பிரிண்டர் மற்றும் இணையவழி தொடர்புச் சாதனங்கள் மிக அவசியமானதாகும். நிதி வசதி குறைவாக உள்ள கோயில்களுக்கு தேவையான இச்சாதனங்களை நிதி வசதிமிக்க கோயில்களால் வாங்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். இப்பணியினை ெசய்வதற்கான அதிகாரம் மண்டல இணை ஆணையர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இணை ஆணையர்கள் தேவைக்கு ஏற்ப இச்சாதனங்களை கொள்முதல் செய்த பின்னர் ஏற்பட்ட செலவினத்தை பொதுநல நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள ஏதுவாக கருத்துருவினை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும். இத்திட்டத்தை காலதாமதம் ஏதுமின்றி விரைந்து செயல்படுத்த ஏதுவாக கணினி உட்பட இணையவழித்தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான அதிகாரம் செயல் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு முறை நிகழ்வாக ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல், கணினி, பிரிண்டர் உட்பட இதர சாதனங்களை உடன் வாங்கி நிறுவ வேண்டும். கூடுதல் தேவையிருப்பின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைப்படி சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் அல்லது இணை ஆணையரிடம் அனுமதி பெற்று கொள்முதல் செய்து கொள்ளலாம். எனவே, எந்தெந்த கோயில்களுக்கு கணினி, பிரிண்டர் உட்பட இதர சாதனங்கள் தேவைப்படுகிறதோ, அந்த தேவையினை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையரின் முழு பொறுப்பாகும். இது குறித்து விரிவான அறிக்கையினை அக்டோபர் 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: