ஊழியரை மீண்டும் பணியமர்த்தியது சொமேட்டோ: நாட்டின் சகிப்புத்தன்மை இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும்.! சொமேட்டோ நிறுவனர் ட்வீட்!

டெல்லி: இந்தியா முழுவதும் இன்றைய ஹாட் டாபிக் சொமேட்டோ தான். பெரும் பேசுபொருளாகியிருக்கிறது சொமேட்டோ ஊழியரின் ஒற்றை பதில். தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஸ் என்பவர் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது அவர் ஆர்டர் செய்ததில் ஒரு உணவை ஹோட்டல் அனுப்பவில்லை. ஆனால் அதற்கான காசை எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் விகாஸ் புகாரளித்துள்ளார். அதற்கு எதிர்முனையிலிருந்து ஊழியரோ, இந்தி தேசிய மொழி. உணவு ஆர்டர் செய்யும் எல்லோருக்கும் இந்தி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்” என பதிலளித்திருக்கிறார். இதனால கோபடமடைந்த விகாஸ் சொமேட்டோ ஊழியர் சொன்னவற்றை ஸ்கிரின்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு பயங்கரமாக வைரலாக #Reject_Zomato, #ZomatoSpeakTamil உள்ளிட்ட ஹேஷ்டாக் ட்விட்டரில்  ட்ரெண்டானது. பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய பிறகு அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக சொமேட்டோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இனி தமிழ் தெரிந்தவர்களை முடிந்தளவிற்கு வேலையில் அமர்த்துவதாகவும் உறுதி தெரிவித்தது. இந்த உடனடி நடவடிக்கையை எதிர்பாராத விகாஸ், அந்த ஊழியருக்கு எப்படி பேச வேண்டும் என பயிற்சி கொடுங்கள்; அவரை பணிநீக்கம் செய்ததை திரும்பப்பெற்று அவருக்கு மீண்டும் பணி வழங்குங்கள். தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழிவாழ்ங்குதல் அல்ல” என்று சொமேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வேலை கொடுப்பதாக சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், வாடிக்கையாளர் சேவை மையத்தில் யாரோ ஒருவர் அறியாமல் செய்த தவறு ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இன்னும் அதிகமாக வேண்டும். நாம் யாரை குற்றம் சொல்ல முடியும்? அவ்வாறு பேசிய ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்துவிட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது. ஆகவே அவரை மீண்டும் பணியில் அமர்த்துகிறோம். இதன்மூலம் அவர் பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச்செல்ல வழிவகுக்கும்.

எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவரும் இளைஞர்கள். அவர்கள் இப்போது தான் தொழிலைக் கற்று வருகிறார்கள். மொழி குறித்தோ மாநில மக்களின் உணர்வுகள் குறித்தோ அறிந்திருக்க அவர்கள் ஒன்றும் நிபுணர்கள் அல்ல. ஏன் எனக்கு கூட அது இல்லை. நம்முடைய குறைகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் சகித்துக்கொண்டு கடக்க வேண்டும். ஒவ்வொருவரின் மொழிகளையும், உள்ளூர் உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும். நாட்டின் மற்ற பகுதிகளை விரும்புவதைப் போலவே நாங்கள் தமிழ்நாட்டையும் விரும்புகிறோம். நாம் அனைவரும் சமமானவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>