சோதனையின் போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அலுவலகத்திற்கு சீல்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடந்த சோதனையின் போது, உதவியாளர் சரவணனின் நண்பர் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்து தடுப்புகள் வைத்து மூடினர்.அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.27.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குவித்ததாக கிடைத்த தகவலின் படி  புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுகோட்டை, மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள வீடு, அலுவலகம் என 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்க நகைகள் மற்றும் 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனையின் போது சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக பணியாற்றி வரும் சரவணன் என்பவரின் நண்பர் சந்திரசேகர் பினாமியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகர் நடத்தி வரும் அலுவலகத்திற்கு நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த சென்றனர். ஆனால், சந்திரசேகர் இல்லாததால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. உடனே போலீசார் சந்திரசேகருக்கு போன் செய்து அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, நேற்று மாலை 3 மணிக்கு நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை வருவாய் ஆய்வாளர் சஞ்சீவிகுமார், உதவி பொறியாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் பூட்டப்பட்டிருந்த சந்திர சேகரின் அலுவலகத்தின் கதவை எழும்பூர் வட்டம் வருவாய் ஆய்வாளர் தீபா, அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேலாளர் திபூ ஆகியோர் முன்னிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலக கதவில் நோட்டீஸ் ஒட்டினர். மேலும், அலுவலக நுழைவு வாயின் முன்பு தடுப்புகள் அமைத்து சீல் வைத்தனர்.

Related Stories:

More
>