அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் வனப்பரப்பை அதிகரிக்க ரூ.37 கோடியில் திட்டம்

சென்னை: சென்னையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறைக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பசுமைத் தமிழகத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில்  வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்துவது, 5 ஏக்கர் கீழ் உள்ள தனியார் நிலங்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்களிப்பது, சோலை மரங்களை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், 100 எண்ணிக்கைக்கு குறைவாக சில்வர் ஓக் மரங்களை வெட்டும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, தமிழ்நாடில் மரஅறுவை நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது, பள்ளிகரணை சதுப்புநில மேம்பாட்டிற்காக கூடுதல் நிதியைப்பெறுதல், பழுதடைந்த வனச்சாலைகளை சீரமைத்தல் மற்றும் நெடுஞ்சாலைப் பணிக்காக தடையில்லா சான்று உடனடியாக வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் வனப்பரப்பை  33 சதவீதம்  உயர்த்த  எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகள்  குறித்தும், இதற்காக வரும் ஆண்டுகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு ரூ.37 கோடி அரசின் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. 23 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு நடப்பாண்டில் பல்வேறு திட்டங்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வனத்துறை தொடர்பாக விவசாயிகள் மற்றும் வனக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை களைவதற்காக வரும் 23ம் தேதி தேனி மாவட்டத்தில் முதலாவது கூட்டம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>