மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் குமரி மாவட்டம் விரைந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி மாலை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்தது.  திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சாலைகள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தாமிபரணி, பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள், வாழை தோட்டங்கள், வயல் வெளிகள் மூழ்கின. கும்ப பூ சாகுபடிக்கான நடவு பணிகள் முடிந்த வயல் வெளிகளிலும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர்கள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதல்வரின் உத்தரவை தொடர்ந்து, நிவாரண பணிகளை மேற்கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் சென்றார். அவர் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.

Related Stories: